உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.5 கோடியில் நல்லம்பாக்கம் சாலை பணி நிறைவு அதிக பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

ரூ.5 கோடியில் நல்லம்பாக்கம் சாலை பணி நிறைவு அதிக பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

நல்லம்பாக்கம்,:வண்டலுார் -- கிளாம்பாக்கம் பிரதான சாலையுடன் நல்லம்பாக்கம் ஊராட்சியை இணைக்கும் வகையில், 2.4 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் 25 ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பி வந்தனர்.ஆனால், இந்த வழித்தடம், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால், உரிய அனுமதி கிடைப்பதில் பல்வேறு தடைகள் எழுந்தன. இதனால், பலகட்ட போராட்டங்களை அப்பகுதிவாசிகள் முன்னெடுத்தனர்.

அனுமதி

இந்நிலையில், கடந்த 2024ல், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், முயற்சி எடுக்கப்பட்டு, வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெறப்பட்டது.இதையடுத்து, 2.4 கி.மீ., துாரம், 21 அடி அகலத்தில், தார்ச்சாலை அமைக்க ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2024, ஜூலை 23ல், பணிகள் துவக்கப்பட்டு, கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்தன.தற்போது, சாலை பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டதால், தாம்பரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து நல்லம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை

அப்பகுதிவாசிகள் கூறியதாவது:வண்டலுார் - கேளம்பாக்கம் பிரதான சாலையிலிருந்து, நல்லம்பாக்கம் ஊராட்சிக்கு வரக்கூடிய 2.4 கி.மீ., சாலையில், 60க்கும் மேற்பட்ட கல் அரவை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஜல்லி, 'எம்.சாண்ட்' ரெடி மிக்ஸ் கலவை உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த தொழிற்சாலைகளுக்கு, 300க்கும் மேற்பட்ட கனரக லாரிகள், தலா நான்கு முறை என, தினமும் 1,000 தடவைக்கு மேல் சென்று வந்ததால், இந்த வழித்தடம், மேடு பள்ளங்களுடன், பொதுப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியது.இதனால், இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.பின், அப்பகுதிவாசிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, தடம் எண் 55டி, என்ற ஒரு பேருந்து மட்டும், தாம்பரத்திலிருந்து சதானந்தபுரம், கொளப்பாக்கம், கண்டிகை, கீரப்பாக்கம் மார்க்கமாக இயக்கப்படுகிறது.இதுவும் காலை இருமுறை, மாலை இருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.தற்போது, சாலை புதிதாக அமைக்கப்பட்டுவிட்டதால், தாம்பரம், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து, இந்த புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை