மேலும் செய்திகள்
அஞ்சல் தினம் ஊர்வலம்
10-Oct-2025
நந்திவரம்: நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுதலாக இரண்டு அஞ்சல் அலுவலகம் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, நகரின் மைய பகுதியில் இயங்கி வந்த தபால் நிலையம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகரின் கடைசி எல்லையாக உள்ள, கே.கே.நகருக்கு மாற்றப்பட்டது. இதனால், ஓய்வூதியம் பெறும் முதியோர், செல்வ மகள் உள்ளிட்ட திட்டங்களில் பணம் செலுத்தும் மாதாந்திர சேமிப்பாளர்கள், விரைவு மற்றும் பதிவு தபால் அனுப்புவோர், 3 கி.மீ., துாரம் பயணித்து, தபால் நிலையம் வரவேண்டி உள்ளது. எனவே, தபால் நிலையத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்றுவதுடன், கூடுதலாக இரண்டு அஞ்சல் அலுவலகங்கள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப் பகுதி மக்கள் கூறிய தாவது: தற்போது அஞ்சல் அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தில், போதுமான இடவசதி இல்லை. முட்டு சந்தில் உள்ளதால், வாகனங்கள் வந்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது. மாதத்தின் முதல் வாரத்தில், அதிக வாடிக்கையாளர்கள் வருவதால், போதிய இட வசதியின்றி, அலுவலகத்தின் வெளியே வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. தவிர, நகரின் ஒதுக்குப்புறமாக, வெகு துாரத்தில் அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளதால் பெண்கள், முதியோர், ஆட்டோவில் பயணித்து வருகின்றனர். இதனால் நேரம், பணம் விரயமாகிறது. அருகே உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியில், இரு தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. ஊராட்சிக்கே இரு தபால் நிலையங்கள் என்றால், நகராட்சிக்கு அதை விட கூடுதல் தபால் நிலையங்கள் அமைப்பது தான் நியாயம். எனவே, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுதலாக இரண்டு தபால் நிலையங்கள் அமைக்க, தபால் துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Oct-2025