தெருக்களில் குவிந்துள்ள குப்பையை அகற்ற நென்மேலி மக்கள் வேண்டுகோள்
நென்மேலி: நென்மேலி ஊராட்சியில், தெருக்களில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நென்மேலி ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில், கடந்த 20 நாட்களாக, குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி உள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு நிலவுவதால், இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, நென்மேலி, 9வது வார்டை சேர்ந்த சந்திரன், 44, என்பவர் கூறியதாவது: ஊராட்சியில் துாய்மை பணியாளர் பற்றாக்குறை உள்ளதால், வீடுதோறும் குப்பை சேகரிக்க வண்டி வருவதில்லை. தவிர, வீடுகளில் தேங்கும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்ட, குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. 'குப்பையை தெருவில் கொட்டாமல், எரித்து விடுங்கள்' என, ஊராட்சி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், குப்பையை எரிக்கும் போது வரக்கூடிய புகையால், அண்டை வீட்டாருடன் சண்டை வருகிறது. இதனால், அவரவர் வசதிக்கேற்ப தெருக்களில் குப்பையை வீசிவிட்டுச் செல்கின்றனர். தவிர, தெருக்களில் தேங்கும் குப்பையை சேகரித்து, மொத்தமாக ஓரிடத்தில் கொட்டுவதற்கும், ஊராட்சியில் இடம் இல்லை. துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால், கடந்த 20 நாட்களாக குப்பை அப்புறப்படுத்தப்படாமல், தெருக்களில் குவிந்துள்ளது. குப்பையில் உணவு தேடி மாடுகள், நாய்கள் குவிகின்றன. அவை சண்டையிட்டு சாலையில் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். எனவே, நென்மேலி ஊராட்சியில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.