இரும்புலிச்சேரி பாலாற்றில் புது பாலம்...ரூ.46 கோடியில்!:10 ஆண்டு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு
நெரும்பூர்:இரும்புலிச்சேரி பாலாற்றில், 10 ஆண்டுகளுக்கு முன் இடிந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக, 46 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பாலம் அமைவதால், 10 ஆண்டுகளாக தவித்துவந்த இரும்புலிச்சேரி, எடையாத்துார் ஆகிய ஊராட்சி பகுதிகளின் போக்குவரத்து சிக்கலுக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் அருகில், பாலாறு கடக்கிறது. இங்குள்ள எடையாத்துார் பகுதியில், ஆறு இரண்டாக பிரிந்து, சில கி.மீ., தொலைவு தனித்தனியே கடந்து, இரும்புலிச்சேரி பகுதியில் மீண்டும் இணைகிறது.இரும்புலிச்சேரி, எடையாத்துார் ஆகிய ஊராட்சிப் பகுதிகள், ஆறுகள் இடையே தனித்தீவாக உள்ளன. இப்பகுதியினர், அத்தியாவசியத் தேவைகள், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அவசியத்திற்கு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்கின்றனர்.இத்தீவு பகுதியை, நெரும்பூர் - புதுப்பட்டினம் சாலை வழியே பிற பகுதிகளுடன் இணைக்க, இரும்புலிச்சேரி ஆற்றில், 35 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது.ஆனால், எடையாத்துார் பகுதியில் பாலம் இன்றி, அப்பகுதியினர் ஆற்றில் நடந்து கடந்து வந்தனர். வெள்ளப்பெருக்கின் போது, இரும்புலிச்சேரி பாலம் வழியே கடந்தனர்.இதற்கிடையே, கல்பாக்கம் பாவினி அணுமின் நிறுவனம், சென்னை அணுமின் நிலையம் ஆகியவற்றின் நிதி பங்களிப்பில், எடையாத்துார் - பாண்டூர் இடையே, பாலம் கட்டி பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், இரும்புலிச்சேரி பாலம் பலவீனமடைந்து, கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடிந்தது. தற்காலிக போக்குவரத்திற்காக, பழைய பாலத்திலிருந்து 1 கி.மீ., கிழக்கில், பழைய வீராணம் திட்ட குழாய்கள் வைத்து, மண்ணால் ஆன தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அந்த தற்காலிக பாலமும், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படுகிறது.இப்பகுதியினர், எடையாத்துார் பாலம் வழியே கடக்க, ஐந்து கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், சாலை சீர்கேடு, நேர விரயம், எரிபொருள் விரயம் கருதி, தற்காலிக மண்பாதை பாலத்திலேயே கடந்து செல்கின்றனர்.வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, எடையாத்துார் பாலம் வழியே சிரமத்துடன் சுற்றிச் செல்கின்றனர். தங்கள் பகுதியில், புதிய பாலம் அமைக்க வேண்டும் என, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், செங்கல்பட்டு, நெடுஞ்சாலை திட்டங்கள் கோட்ட பிரிவு சார்பில், 46 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் அமைக்க முடிவெடுத்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.கேரள மாநில தனியார் நிறுவனத்திடம், பாலம் கட்டுமான ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் கருதி, கடந்த பிப்., மாதம், பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டன. பழைய பாலம் முற்றிலும் அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது.இப்பாலம், 644 மீட்டர் நீளம், 10 மீ., அகலம், ஆற்று தரைமட்டத்திலிருந்து 23 அடி உயரத்தில், 22 துாண்களுடன் அமைகிறது. இதுவரை, 10 துாண்கள் கட்டப்பட்டுள்ளன. பிற துாண்களின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஒப்பந்த நிறுவனத்தினர் கூறும்போது, “2026 ஜன., வரை கட்டுமான ஒப்பந்த காலம் உள்ளது. அதற்கு முன்பாகவே பாலத்தை கட்டி முடிக்க தீர்மானித்துள்ளோம்,” என்றனர்.இரும்புலிச்சேரி பாலாற்றில், புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது.