உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக கட்டப்பட்ட தானியங்கி ஷட்டர்கள் மதுராந்தகம் ஏரியில் நீர் திறந்து சோதனை

புதிதாக கட்டப்பட்ட தானியங்கி ஷட்டர்கள் மதுராந்தகம் ஏரியில் நீர் திறந்து சோதனை

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரியில் புதிதாக கட்டப்பட்ட தானியங்கி 'ஷட்டர்'கள் வழியாக தண்ணீர் திறந்து, சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2,500 ஏக்கர். இதிலுள்ள ஐந்து மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலம் என, மொத்தம் 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம் ஏரியை சீரமைக்க 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு துார் வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியில், கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றன. இந்நிலையில், கூடுதலாக 43 கோடி ரூபாய், 2024ல் ஒதுக்கப்பட்டு, மொத்தமாக, 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, தானியங்கி 'ஷட்டர்'கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், ஏரியில் விவசாய பயன்பாட்டிற்காக, 40 சதவீதம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் முழுதும் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறவும், அதிகமான நீர் வரத்து உள்ள காலங்களில், ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் வகையிலும், 12 தானியங்கி ஷட்டர்கள் அமைத்து, நீர் வெளியேற்றும் கதவணை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக, பணிகள் நடைபெறும் பகுதியின் எதிரே, ஏரியின் உள்பகுதியில் மண் கொட்டி தடுப்பு அமைக்கப்பட்டது. தற்போது, தானியங்கி ஷட்டர்கள் அமைக்கப்பட்டதால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து அறியும் வகையில், ஷட்டர்களை திறந்து, ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. தண்ணீர் வெளியேற்றப்பட்ட பின், உள்பகுதியில் மண் கொட்டி அமைக்கப்பட்ட தடுப்பை முழுதுமாக அகற்றும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதனால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிக்கு வரும் நீர் முழுதும், தானியங்கி ஷட்டர்கள் வழியாக, கிளியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் முடிந்துள்ளன. ஷட்டர்கள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு, சோதனை நடந்து வருகிறது. தானியங்கி ஷட்டர்கள் அமைக்கும் பணிக்காக, ஏரியின் உள்பகுதியில் மண் கொட்டி தடுப்பு அமைக்கப் பட்டது. அந்த பகுதியில் உள்ள மண்ணை அகற்றவும், தானியங்கி ஷட்டர்கள் குறித்து அறிய, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பருவமழைக்கு, ஏரியின் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை மொத்தமாக ஏரியில், 96 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. - தர்முதுரைசாமி, உதவி செயற்பொறியாளர், கிளியாறு வடிநில உபக்கோட்டம், மதுராந்தகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை