நள்ளிரவு கடந்தும் கொண்டாட்டம் கூடாது: புத்தாண்டுக்கு போலீஸ் கிடுக்கி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், இன்று 31ம் தேதி முதல் ஜன., 1ம் தேதி வரை, ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். மாவட்டத்தில் மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள், 200க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள் உள்ளதால், புத்தாண்டையொட்டி, பொதுமக்கள் அதிக அளவில் கோவில் மற்றும் சுற்றுலா செல்வர். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, செங்கல்பட்டு மாவட்ட போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்: கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., தேசிய நெடுஞ்சாலைகளில், நட்சத்திர ஹோட்டல்கள், பீச் ரிசார்டு உணவகங்களில், ஜன., 1ம் தேதி அதிகாலை 12:30 மணிக்கு மேல், எந்தவித நிகழ்ச்சியும், கொண்டாட்டங்களும் நடத்தக் கூடாது. மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறும் பட்சத்தில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்யும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன பந்தயம், சாகசத்தில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும். திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில், கடலில் இறங்கி குளிக்கவும், படகில் கடலுக்குள் அழைத்து செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. புகார்களுக்கு கட்டுப்பாட்டு அறை எண் 044-- 29540888, தனிப்பிரிவு அலுவலகம், 044- 29540 555-777, ஹலோ போலீஸ் 72001 02104 ஆகிய எண்களில் அழைக்கலாம். புத்தாண்டு பாதுகாப்பு பணியில், மொத்தம் 564 போலீசார் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். போலீசார் ரோந்து பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுவர். - வி.வி. சாய் பிரணித், மாவட்ட எஸ்.பி., செங்கல்பட்டு. பட்டாசு வெடிக்க தடை சென் னை காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில், ஆளில்லா விமானம் வாயிலாக, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவர். பொதுமக்கள் கடலில் இறங்க மற்றும் குளிக்க, தடை செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, பைக் சாகசத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்க, 30 இடங்களில் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, 425 இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் இருப்பர். சென்னை முழுதும், புத்தாண்டு அன்று பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். அரசின் அனுமதி பெற்ற மனமகிழ் மன்றங்கள், ஹோட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மது அருந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.