அதிரடி காட்டிய மறைமலைநகர் நகராட்சி கடையை அகற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில், 6 வார்டுகள் நகர் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு, 400க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக, மறைமலைநகர் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பாவேந்தர் சாலை, திருவள்ளுவர் சாலை, எம்.ஜி.ஆர்., சாலை, கம்பர் சாலைகளில், நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நடைபாதை வியாபாரிகள் மற்றும் நிரந்தர கடைகள் வைத்திருப்போர் என பலரும், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர்.இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து பல்வேறு தரப்பினரும், நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் அளித்து உள்ளனர்.இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் தற்போது, நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்துள்ள அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் பறிமுதல் செய்யப்படும் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து தற்போது, நடைபாதை வியாபாரிகள் தங்களின் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.