சமுதாய நலக்கூடம் அமைக்க ஓதியூர் கிராமத்தினர் கோரிக்கை
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் சமுதாய நலக்கூடம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.ஓதியூர், முட்டுக்காடு, முதலியார்குப்பம், நயினார்குப்பம் ஆகிய கிராமங்களில் வசிப்போர், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர்.முறையான பராமரிப்பு இல்லாததால், தற்போது சமுதாய நலக்கூடம் சீரழிந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், குடும்ப சுப நிகழ்ச்சிகளை நடத்த கடப்பாக்கம், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.தனியார் மண்டபத்தில் அதிகமான பணம் கேட்பதால், ஏழை எளிய மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய சமுதாய நலக்கூடத்தை அகற்றி, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.