உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொள்ளைக்கும்பல் தாக்கியதில் இளம்பெண் பலி நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை கொலையாளியில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

கொள்ளைக்கும்பல் தாக்கியதில் இளம்பெண் பலி நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை கொலையாளியில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருகே, வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். கொலையாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்; மற்றொருவரை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜெயசுரேஷ்; செங்கல்பட்டு அரசு மாணவர் விடுதி காப்பாளர். இவரது மனைவி அஸ்வினி, 30. இவர்களுக்கு, 11 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். பிள்ளைகள் வையாவூரில் உள்ள பாட்டி வீட்டிலேயே தங்கி, அருகில் உள்ள பள்ளியில் படிக்கின்றனர். அஸ்வினி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இதனால், பேருந்தில் கம்பெனிக்கு சென்று வர ஏதுவாக, காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், ஜெயசுரேஷூம், அஸ்வினியும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். கடந்த 23ம் தேதி, ஜெயசுரேஷ் சொந்த வேலையாக சென்னை சென்றிருந்தார். அன்றையை தினம், மதியம் பணிக்கு சென்ற அஸ்வினி, இரவு 11:30 மணிக்கு வீடு திரும்பினார். அடுத்த நாள் காலை ஜெயசுரேஷ், மனைவி அஸ்வினியை போனில் அழைத்தபோது, போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகமடைந்த ஜெயசுரேஷ் தன் மைத்துனர் அறிவரசன் என்பவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர், பகல் 12:30 மணியளவில், திம்மசமுத்திரத்தில் உள்ள தன் அக்கா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அஸ்வினியின் ஸ்கூட்டி வாகனம் கீழே விழுந்து கிடந்தது. சந்தேகமடைந்த அறிவரசன், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஆடைகள் கலைந்த நிலையில், உடலின் பல்வேறு இடங்களில் காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டிலிருந்த நகைகள் என, 8 சவரன் நகைகள் மாயமாகி உள்ளன. ஆம்புலன்ஸ் வாயிலாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அஸ்வினி அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து, தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்வினி, நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து, அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை முழுமையாக ஆய்வு செய்தனர். குற்றவாளிகள் இருவர் என்பதும், கொள்ளையடிக்கும்போது பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அஸ்வினி கடுமையாக போராடியபோது, அவரை இரும்பு ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அஸ்வினி இறந்ததால், அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, பொன்னேரிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வாக்குவாதம் செய்தனர். காவல் நிலையத்தில், 50க்கும் மேற்பட்டோர் குவிந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாலுச்செட்டிச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன், 28, என்பவரை கைது செய்துள்ளதாகவும், தலைமறைவான ராஜசேகர் என்பவரை தேடி வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, முற்றுகையிட்ட உறவினர்கள் கலைந்து சென்றனர். காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெண்ணை பலாத்காரம் செய்ததாக, பிரேத பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை. சில மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. முடிவுகள் வந்த பிறகே எதையும் கூற முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை