உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நவீன நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் திறப்பு

நவீன நெல் சேமிப்பு கிடங்கு சிலாவட்டத்தில் திறப்பு

மதுராந்தகம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில், நவீன நெல் சேமிப்பு கிடங்கு, நேற்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய தொழில்.இப்பகுதியில் கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசனம் வாயிலாக, விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.இதில், பருவமழை காலங்களில், நெல் விவசாயம் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி, எல்.எண்டத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 30,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்கின்றனர்.விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இவ்வாறு, விவசாயிகளிடமிருந்து, 30,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த நெல் மூட்டைகள், சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், நெல் மூட்டைகள் வீணாகாதவாறு வைக்கப்பட்டன.மேலும், தரைப்பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டை அடுக்கி, நெல் மூட்டைகளை பாலித்தீன் தார்ப்பாய்களால் மூடி பாதுகாத்து, லாரிகள் வாயிலாக, தென் மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு, செங்கல்பட்டில் இருந்து ரயில்களில் அனுப்பி வந்தனர்.தற்காலிகமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக கூரை தளம் அமைத்து, நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டுமென, விவசாயிகள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.நபார்டு வங்கி நிதி உதவியுடன், 14.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தலா 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 5 கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் கட்டுமான பணிகள், கடந்த 2024 பிப்ரவரியில் தொடங்கி, பணிகள் நடந்து வந்தன.இப்பணிகள் முடிவுற்று, சிலாவட்டம் நவீன நெல் சேமிப்பு கிடங்கு, நேற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.இந்நிகழ்வில், முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், உதவி தர ஆய்வாளர் புண்ணியகோட்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ