தாது மணல் எடுக்க எதிர்ப்பு
செய்யூர்: நயினார்குப்பம் கிராமத்தில் நீர்நிலைப்பகுதியில் தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கழிவெளி ஓரத்தில் சிலிக்கான் தாது மணல் படுகை உள்ளது. இந்த சிலிக்கான் மணல் கண்ணாடி தயாரிப்பு, கட்டுமானப்பொருட்கள் தயாரிப்பு, தாவர வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கனிம வள நிறுவனம் சார்பாக டெண்டர் விடப்பட்டு இப்பகுதியில் உள்ள சிலிக்கான் தாது மணல் எடுக்கப்பட்டு வருகிறது. அதிக அளவில் தாது மணல் ஏற்றுமதி செய்வதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், கழிவெளிநீர் நிலத்தடி நீருடன் கலந்து உப்புநீராக மாறி வருவதால் குடிநீருக்கு மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது நயினார்குப்பம் கிராமத்தில் சிலிக்கான் தாது மணல் எடுப்பதற்கான பணி நடந்து வருகிறது. நயினார்குப்பம் பகுதியில் தாது மணல் எடுத்தால் நிலத்தடிநீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தாது மணல் எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.