கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
அச்சிறுபாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், நேற்று திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த கொங்கரை மாம்பட்டு, முருங்கை, களத்துார், கீழ் அத்திவாக்கம், ஒரத்தி ஊராட்சியில், குருவை சாகுபடியில் கிணறு மற்றும் ஏரி பாசனத்தின் மூலமாக விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர். கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் நடந்து வருவதால், விவசாயிகள் கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்த பகுதியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை, கொட்டி பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கொங்கரை மாம்பட்டு ஊராட்சியில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயன், விவசாயிகள் பங்கேற்றனர்.