பனையூர் சமுதாயநலக்கூடம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
கடப்பாக்கம்:பனையூர் கிராமத்தில் மந்தநிலையில் நடந்து வரும் சமுதாயநலக் கூடம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர். செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில் ,கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாயநலக் கூடம் உள்ளது. பனையூர், பனையூர் சின்னகுப்பம், பனையூர் பெரியகுப்பம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்ப விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை சமுதாயநலக்கூடத்தில் நடத்தி வந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல், சமுதாயநலக்கூடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. பழுதடைந்த சமுதாயநலக் கூடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், இடைக்கழிநாடு பேரூராட்சி சார்பாக 35 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு கட்டுமானப்பணி துவங்கியது. மந்தநிலையில் நடந்து வருகிறது. துறை சார்ந்த அதிகாரிகள் சமுதாயநலக் கூடம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.