சித்தாமூர் குளத்தில் பூங்கா பகுதிவாசிகள் வேண்டுகோள்
சித்தாமூர், சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம், ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்து நீரை, அப்பகுதி மக்கள் குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல், குளத்தில் குப்பை குவிந்துள்ளது. அருகே உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் குளத்தில் கலந்து, துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்தொற்று பரவும் நிலை உள்ளது. இதனால், குளத்து நீரை மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.சித்தாமூர் பஜார் பகுதியில் தினசரி, ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தம் அருகே, இக்குளம் மாசடைந்து அலங்கோலமாக உள்ளதால், காண்போர் முகம் சுளிக்கின்றனர்.மேலும் கடந்த 2023 பிப்ரவரியில், சாலை விரிவாக்க பணிக்காக, குளத்தின் இரண்டு கரையிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தற்போது, சித்தாமூர் பகுதியில் பூங்கா வசதி இல்லாததால், பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாட பூங்கா இல்லாமலும் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குளத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.