திருக்கச்சூரில் பஸ் நிறுத்தம் அமைக்க பயணியர் கோரிக்கை
மறைமலை நகர்;சிங்கபெருமாள் கோவில் அருகே திருக்கச்சூர் பகுதியில், பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், 6,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், செங்கல்பட்டு -- திருவள்ளூர் மார்க்கமாக தடம் எண் '82சி' விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால், இந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், 1 கி.மீ., துாரத்தில் உள்ள தெள்ளிமேடு அல்லது சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரும் சூழல் உள்ளது. எனவே, திருக்கச்சூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.