உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி

செங்கை புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணியர் அவதி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில், குடிநீர் வசதியின்றி பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம், கல்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் இந்த பேருந்து நிலையத்திற்கு, பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தில் பயணியருக்கு குடிநீர் வசதி இல்லாததால், தினமும் தவித்து வருகின்றனர். பிரச்னைக்கு தீர்வாக, இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பயணியர் கூறியதாவது: செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால், இங்குள்ள கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுத்திகரிப்பு நிலையம் பழுது

செங்கல்பட்டு நகராட்சி சார்பில், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில்,'நமக்கு நாமே திட்டம்' மூலமாக, 2022ம் ஆண்டு, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் பழுதடைந்து, பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. பயணியர் நலன் கருதி, இந்த சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கி, மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி