உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் அரசு மருத்துவமனையில் மாத்திரைக்காக நோயாளிகள் அலைக்கழிப்பு

நந்திவரம் அரசு மருத்துவமனையில் மாத்திரைக்காக நோயாளிகள் அலைக்கழிப்பு

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, நந்திவரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த அரசு மருத்துவமனையில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.அதேபோன்று, கர்ப்பிணியர் மகப்பேறு கிகிச்சை தொடர்பாக, இங்கு உள்ள சிறப்பு தாய் - சேய் நல பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்த மருத்துவமனையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, நோயாளிகளின் பெயரில் நோட்டுப் புத்தகம் வழங்கி, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் ஒரு மாதத்திற்கு வழங்குவது வழக்கம். ஆனால் இதுபோன்ற நோயாளிகளுக்கு மாத்திரைகள் வழங்காமல், கடந்த சில நாட்களாக அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மாத்திரை வழங்க வேண்டியவர்களுக்கு, இரண்டு நாள் அல்லது நான்கு நாட்களுக்கு மட்டும் மாத்திரை கொடுத்துவிட்டு, பிறகு வருமாறு, மருத்துவமனை ஊழியர்கள் கூறி அனுப்புகின்றனர். இதனால், வயதான நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, கிரிதரன், 56, என்பவர் கூறியதாவது:எனக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக மாதந்தோறும் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறேன். இந்த மாதத்திற்கான மாத்திரை வாங்க வந்த போது, மாத்திரைகள் இருப்பு இல்லை எனக் கூறி அனுப்பினர்.மறுநாள் வந்தபோது, இரண்டு நாட்களுக்கு மட்டும் மாத்திரைகள் கொடுத்தனர். அதன் பிறகு வந்த போது, ஐந்து நாட்களுக்கு மட்டும் கொடுத்தனர். காரணம் கேட்டால், மருந்துகள் வரவில்லை எனக் கூறுகின்றனர்.மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கு நாங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ