100 நாள் வேலை வழங்க கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
அச்சிறுபாக்கம்;நுாறு நாள் வேலை வழங்கக்கோரி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அன்னங்கால் கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சிறுபாக்கம் ஒன்றியம், அன்னங்கால் ஊராட்சிக்கு உட்பட்டு கூனங்கரணை, ராஜாம்பாளையம், பழவந்தாங்கல் ஓடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் புதிதாக குளம் அமைத்தல், மரக்கன்று நடுதல், நீர் வரத்து கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள், 100 நாள் பணியாளர்களைக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கூனங்கரணை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்க கோரி, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, வரும் பணி நாட்களில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என, அதிகாரிகளின் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.