சேதமடைந்த சாலையால் சேம்புலிபுரம் மக்கள் அவதி
செய்யூர்:சேம்புலிபுரம் கிராமத்தில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேம்புலிபுரம் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வெடால் செல்லும் சாலையை இணைக்கும் 1.5 கி.மீ., நீள மன்னாதீஸ்வரர் கோவில் தெரு உள்ளது. சாலையை சேம்புலிபுரம்,வெடால், கப்பிவாக்கம், கோவைப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலை ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகின்றனர். மழைகாலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.