| ADDED : ஜன 26, 2024 12:15 AM
மதுராந்தகம்:சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொறையூர் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய, மயானத்திற்கு போகும் பாதை, ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளது.இதனால், மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில், பல தலைமுறைகளாக பிரச்னைக்குரியதாகவே உள்ளது.ஏரி பகுதியில் உள்ள சாலை மிகவும் தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது.இதனால், இக்கிராமத்தில் இறப்பவர்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது, மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.முறையான பாதை அமைத்துத் தரக்கோரி, பல ஆண்டுகளாக ஒன்றிய, மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், மயானத்திற்கு செல்லும் பாதையை ஆய்வு செய்து, மாற்றுப்பாதை அமைத்து தருமாறு, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.