பூதத்தாழ்வார் அவதார குருக்கத்தி செடி நடவு
மாமல்லபுரம்: பூதத்தாழ்வார் அவதரித்த குருக்கத்தி மலர்ச்செடி, மாமல்லபுரத்தில் சிறப்பு பூஜையுடன் நடப்பட்டது.வைணவ சமயத்தைச் சேர்ந்த பனிரெண்டு ஆழ்வார்களில், முதலாழ்வார்கள் என போற்றப்படுபவர்களில், பூதத்தாழ்வார் குறிப்பிடத்தக்கவர். 108 திவ்வியதேசங்களில், 63ம் கோவிலாக பிரசித்திபெற்ற, மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில் உள்ள, நந்தவன தோட்டத்தில், குருக்கத்தி மலரில், கதாயுத அம்சமாக, ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், அவர் தோன்றியதாக புராணம்.அவரது அவதார வளாகத்தில் உள்ள பழமையான மண்டபம், கடந்த ஆண்டு பிப்.,ல், ஸ்தலசயன பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தின் போது புதுப்பிக்கப்பட்டது. ஆழ்வார்கள் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செண்பகம், மல்லிகை, பாரிஜாதம், முல்லை, மனோரஞ்சிதம், இருவாச்சி உள்ளிட்ட மலர்ச்செடிகளை, கோவில் நிர்வாகம் நட்டு பராமரிக்கிறது. இந்நிலையில், பூதத்தாழ்வார் தோன்றிய குருக்கத்தி மலர்ச் செடியை சிறப்பு பூஜை நடத்தி, நடப்பட்டது.