அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் கஞ்சா வேட்டை
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, தாம்பரம் கமிஷனருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் அடிப்படையில், தாம்பரம் கமிஷனர் உத்தரவின்படி, நேற்று கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் போலீசார் குழு அமைக்கப்பட்டது.பின், கூடுவாஞ்சேரியில் உள்ள சபா அடுக்குமாடி குடியிருப்பு, தைலாவரத்தில் உள்ள எஸ்டென்சியா, மறைமலை நகரில் உள்ள வி.ஜி.என்., அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.இதில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கூறப்பட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.இது வரை கஞ்சா பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், படூர் பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனையில், கேளம்பாக்கம், தாழம்பூர் போலீசார் 50க்கும் மேற்பட்டோர், பல குழுக்களாக பிரிந்து, போதை பொருட்கள் பயன்படுத்துகின்றனரா அல்லது விற்பனையில் ஈடுபடுகின்றனரா என, பல கோணத்தில் சோதனை செய்தனர்.இந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை என தெரிகிறது. எனினும், மேலும் விசாரித்து வருகின்றனர்.