உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாணவியரை சீண்டும் ரோமியோக்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்

மாணவியரை சீண்டும் ரோமியோக்கள் ரோந்து வராமல் போலீசார் அலட்சியம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பள்ளி, கல்லுாரி மாணவியர் பாதுகாப்பு கருதி, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, 15 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதுமட்டுமின்றி ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி, செவிலியர் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி மற்றும் தனியார் பெண்கள் கலைக் கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளி, கல்லுாரிகளில், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர். கிராமங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில், காலையில் பள்ளி கல்லுாரிகளுக்கு வரும் இவர்கள் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில் உள்ள பயணியர் நிழற்குடை, ராட்டிணங்கிணறு பயணியர் நிழற்குடை பகுதியில் இறங்கிச் செல்கின்றனர். இதேபோன்று பள்ளி, கல்லுாரி முடிந்து மாலையில் வீட்டிற்குச் செல்லும் போதும், மேற்கண்ட பேருந்து நிழற்குடைகளில் காத்திருந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். மாணவியர் பேருந்திற்காக காத்திருக்கும் இந்த நேரங்களில், 'ரோமியோ'க்கள் மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பகுதியில், காதல் விவகாரத்தில் இளைஞர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால், பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள், போலீசார் தொடர்ந்து ரோந்து வந்து, 'ரோமியோ'க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

'குடி'மகன்களால் தினமும் தொல்லை

பள்ளி மாணவியர் கூறியதாவது: தினமும் பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போதும், பேருந்துகளில் இடமின்றி நின்று கொண்டே பயணம் செய்து வருகிறோம். இதற்கிடையில், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் போது ரோமியோக்களால் அச்சமாக உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் போதையேற்றிக் கொண்டு வரும் 'குடி'மகன்களும், பாலியல் ரீதியாக தொல்லை தருகின்றனர். குறிப்பாக, செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் திரியும் 'குடி'மகன்கள், போதை தலைக்கேறியதும் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். அரைகுறை ஆடையுடன் அங்கேயே படுத்து விடுகின்றனர். இதனால், தினமும் அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது. எனவே, பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவியர் பாதுகாப்பு கருதி போலீசார் பாதுகாப்பிற்கு நிற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை