மின் வினியோகம் துண்டிப்பு கிராமப்புறங்களில் அவதி
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், காற்றுடன் மழை பெய்ததால், கிராமப்புறங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய மின்வாரிய கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக, மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்யும் போது, மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நகப்புறங்களில் உடனடியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களுக்கு பல மணி நேரத்திற்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்படுகிறது. துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக செய்யாததால், கிராமப்புறங்களில் மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு சுற்றியுள்ள கிராமப்புறங்களில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, அதிக காற்றுடன் மழை பெய்த போது, மின்சாரம் தடை செய்யப்பட்டது. அதன் பின், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மின் வினியோகம் செய்யப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு, மின்வாரிய அலுவலகங்களுக்கு, கிராமத்தினர் தொடர்பு கொண்டு கேட்டால், பதில் அளிக்காமல் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், தற்போது, வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மின் பாதைகள் வழியாக செல்லும் பகுதியில் இடையூறாக உள்ள மரங்களை வெட்டி சீரமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கிராமப்புற மக்களின் நலன் கருதி, கிராமங்களில் மின்வினியோகம் சீராக வழங்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.