திட்டமிடாமல் கட்டப்பட்ட மூடுகால்வாய் கழிவுநீர் குட்டையாகும் தனியார் நிலங்கள்
பம்மல்:மழையின் போது, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆண்டாள் நகர், மூவர் நகர், கவுல்பஜார் ஊராட்சி குடியிருப்புகள் வழியாக வெளியேறி, அடையாறு ஆற்றில் கலக்கிறது.முறையான கால்வாய் இல்லாததால், இப்பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆண்டுதோறும் நிலவும் இப்பிரச்னைக்கு தீர்வாக, பம்மல் ஸ்டேட் பாங்க் காலனி - மூவர் நகர், மூவர் நகர் - அடையாறு ஆறு என, இரண்டு கட்டங்களாக, 7.15 கோடி ரூபாய் செலவில், 5,000 அடி துாரத்திற்கு மூடுகால்வாய் கட்டப்பட்டுள்ளது.இந்த மூடுகால்வாய் வழியாக வரும் கழிவுநீர், அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் திட்டமிடாமல் கட்டியதால், கவுல்பஜார் பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் தேங்குகிறது. கால்வாயை ஒட்டியுள்ள தனியார் நிலங்கள், கிட்டத்தட்ட கழிவுநீர் குட்டையாகவே மாறிவிட்டன.அங்கு நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. கொசு தொல்லை, துர்நாற்றத்தால் அங்கு வசிப்போர் ஒவ்வொரு நாளும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நிலத்தில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க, அவற்றின் உரிமையாளர்கள் மண்ணை கொட்டி மூடினால், அவர்களை நெடுஞ்சாலைத் துறையினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.அதே நேரத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிடாமல் கால்வாய் கட்டியதே இப்பிரச்னைக்கு காரணம் என்றும், தீராத இப்பிரச்னையை யார் சரிசெய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.விமான நிலைய சுற்றுச்சுவரை ஒட்டி, இவ்வளவு பிரச்னை நீடித்து வரும் நிலையில், அதை தீர்ப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தொகுதி அமைச்சர் அன்பரசன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.