உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் பல்கலை மாணவர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் பல்கலை மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரியில் தங்கி, எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வந்த வட மாநில இளைஞர் நேற்று முன்தினம் இரவு, தூக்கிட்டு உயிர் மாய்த்தார். உத்தரபிரதேச மாநிலம், லக்னோ நகரைச் சேர்ந்த நிருபிகார், 48, என்பவரது மகன் மகன் பிரஞ்ஜல் பாஜ்பாய், 22. காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில்,'சைபர் செக்யூரிட்டி' பாடத்தில், நான்காம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். அதே பல்கலையில் படித்து வரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களுடன் சேர்ந்து, கூடுவாஞ்சேரியில் உள்ள சபா குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் ஐவரும், வீட்டின் முன் அறையில் அமர்ந்து பேசியுள்ளனர். இரவு 9:30 மணியளவில், பிரஞ்ஜல் பாஜ்பாய் படுக்கை அறைக்குச் சென்று, கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளார். நண்பர்கள் நால்வரும் கதவைத் தட்டியும் அவர் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, பிரஞ்ஜல் பாஜ்பாய் மின் விசிறியில் வெள்ளை நிற துப்பட்டாவால் துாக்கிட்டு, தொங்கியபடி இருந்துள்ளார். உடனை அவரை மீட்டு, எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், பிரஞ்ஜல் பாஜ்பாய் உடலை, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, நேற்று மதியம் அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, பிரஞ்ஜல் பாஜ்பாய் தற்கொலைக்காக காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ