செங்கையில் துணை தாசில்தார்கள் பதவி உயர்வு...கிடப்பில்!:பணியிடம் காலியாக உள்ளதால் மனுக்கள் தேக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், மாவட்டத்தில் பட்டா மாற்றம், அரசு நலத்திட்டம் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காணும் பணிகள் தேக்கமடைந்துள்ளன.காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, 2012ம் ஆண்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நேரடி நியமான உதவியாளர் பணிக்கு, 216 பேருக்கு உத்தரவு வழங்கியது.கடந்த 2018ம் ஆண்டு, நேரடி நியமன உதவியாளர்களுக்கு, வருவாய் ஆய்வாளர்கள் பயற்சி வழங்கும்போது, தகுதி அடிப்படையில் நியமிக்காமல், இனச்சூழற்சி அடிப்படையில் வழங்கப்பட்டது.அதன்பின், ஐந்தாண்டுகளுக்கு பின், துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும். அப்போதும், தகுதி அடிப்படையை கருத்தில் கொள்ளாமல், இனச்சூழற்சி அடைப்படையில் பதவு உயர்வு வழங்கப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவையும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மறைத்து, பதவி உயர்வு வழங்கியது. 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, தற்காலிகமாக துணை தாசில்தார் பதவி வழங்கியது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, துணை தாசில்தார் பதவி உயர்வுகள், தகுதி அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என, 2024ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம், பதவி உயர்வை கிடப்பில் போட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, 2019ம் ஆண்டு, மாவட்டம் பிரிக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக, துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கும் கோப்புகளை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 50 தாசில்தார் பணியிடங்களில், 25 தாசில்தார் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒவ்வொரு தாசில்தாருக்கும் இரண்டு அல்லது மூன்று கூடுதல் பொறுப்பு பணிகளை பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா மாற்றம், நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் தேக்கம் அடைந்து, பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.ஆனால், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கு தகுதி இருந்தும், கடந்த 10 ஆண்டுகளாக, முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளனர்.இதனால், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், தாசில்தார்கள் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.அதன்பின், அவர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுவர். இந்நிலையில், துணை தாசில்தார்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், ஓராண்டு பதவியில் இருக்க வேண்டிய தாசில்தார்களும், மீண்டும் அதே பணியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.இதற்கு தீர்வு காணக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் பதவி உயர்வுகள், தகுதி அடிப்படையில் வழங்க வேண்டும். தகுதி அடிப்படை இல்லாமல், இனச்சூழற்சி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் பதவி உயர்வை தடுக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதிப்பெண் அடிப்படையிலான துணை தாசில்தார் பட்டியலை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.- வருவாய்த்துறை ஊழியர்கள்,செங்கல்பட்டு.
தாசில்தார் பணியிடங்கள்
* செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் - தனி தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம்.* மதுராந்தகம், அனகாபுத்துார் ஆகிய இடங்கள் - தனி தாசில்தார் நகர நிலவரி திட்டம்.* சென்னை முத்திரைத்தாள் தனி தாசில்தார், மதுராந்தகம்* ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்* செங்கல்பட்டு கோட்ட கலால் அலுவலர்* அகல ரயில்பாதை தாசில்தார்.* மதுராந்தகம் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தார்* சிறுசேரி சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தார்* கோயம்பேடு வெளிவட்டபாதை நில எடுப்பு தனி தாசில்தார் மற்றும் 6 நில எடுப்பு தனி தாசில்தார்கள்.* தாம்பரம் டாஸ்மாக் (கலால்) மேலாளர்* பல்லாவரம் டாஸ்மாக் மேலாளர்