மழைநீர் கால்வாயில் மின்கம்பம் அகற்றக்கோரி போராட்டம்
மதுராந்தகம்:மதுராந்தகம், செங்குந்தர்பேட்டை அருகே வண்ணாங்குளம் பகுதியில், மழைநீர் கால்வாய் நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றக் கோரி, அப்பகுதியில் வசிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட செங்குந்தர்பேட்டை பகுதியில், புதிதாக தனியார் வீட்டு மனைப் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வீட்டு மனைப்பிரிவின் மையத்தில் மின் கம்பம், மின்வடங்கள் அமைக்கப்பட்ட நிலையில், மின்வாரியத்தினர் இதை மாற்றி, மழைநீர் கால்வாய் நடுவே மின் கம்பம் நட்டுள்ளனர். இந்த மழைநீர் கால்வாய் மேட்டுத்தெரு, மலட்டு குட்டை, பங்களா காலனி, செங்குந்தர்பேட்டை, அருளாளீஸ்வரர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் செல்லும் மிக முக்கிய கால்வாய். இதன் நடுவில் மின் கம்பம் நடப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வரும் சூழல் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் மின்வாரிய உயரதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாயில் நடப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இதைக் கண்டித்து நேற்று, இப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்குந்தர்பேட்டை, வண்ணாங்குளம் பகுதியில், மழைநீர் கால்வாயில் நடப்பட்டுள்ள மின்கம்பம் குறித்து, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - மின்வாரிய உதவி செயற்பொறியாளர், மதுராந்தகம்.