உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திம்மாவரம் படிப்பகத்தை இடிக்க எதிர்ப்பு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

திம்மாவரம் படிப்பகத்தை இடிக்க எதிர்ப்பு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில், நியாய விலைக் கடை புதிதாக கட்டித்தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, 2023ம் ஆண்டு, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அம்பேத்கர் நகர் பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழைய அம்பேத்கர் படிப்பகத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் நியாய விலைக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இந்த படிப்பகத்தை இடிக்கக் கூடாது என ஒரு தரப்பினரும், இதே பகுதியில் அமைக்க வேண்டும் மற்றொரு தரப்பினரும் கூறியதால், கடந்த ஓராண்டாக பிரச்னை நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று காலை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் அருள்தேவி உள்ளிட்டோர், அம்பேத்கர் படிப்பகத்தை இடிக்க, 'பொக்லைன்' இயந்திரத்துடன் சென்றனர்.சுவரில் இருந்த அம்பேத்கர் படத்தை அதிகாரிகள் அகற்ற முயன்றபோது, கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலரை கண்டித்து, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர். அதனால் அவர்கள் கலைந்து சென்றனர். அதிகாரிகளும், படிப்பகத்தை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.இது குறித்து, தி.மு.க., கவுன்சிலர் அருள்தேவி கூறியதாவது:பாழடைந்த கட்டடத்தை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, அதிகாரிகளுடன் இடிக்க சென்றோம். சிலர் வேண்டுமென்றே நியாய விலைக்கடை இங்கு அமையக் கூடாது என்ற எண்ணத்தில் தடுக்க முயல்கின்றனர்.அதற்காக, பாழடைந்த கட்டடத்திற்கு இரவோடு இரவாக வண்ணம் பூசி, அம்பேத்கர் படத்தை ஒட்டியுள்ளனர். அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை, தங்களின் சுய லாபத்திற்காக பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.மேலும், எங்கள் பெயரை மக்களிடம் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த படிப்பக கட்டடம், தற்போது செயல்படவில்லை என்றாலும், கிராம மக்கள் பல்வேறு பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர்.எனவே, இந்த கட்டடத்தை இடிக்காமல், மாற்று இடத்தில் நியாய விலைக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி