கல்பாக்கம் கடலில் அபாய குளியல் பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை
கல்பாக்கம்:அணுசக்தி துறை கல்பாக்கம் நகரிய பகுதியில், பகிங்ஹாம் கால்வாய் வங்கக் கடலுடன் இணையும் முகத்துவார பகுதி உள்ளது. அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில், கடல்நீர் கால்வாயில் பெருக்கெடுக்கும் சூழலில், இப்பகுதி கடற்கரை இயற்கை அழகுடன் அமைந்துள்ளது.அணுசக்தி துறையினரும், கடற்கரையில் குப்பை குவிய விடாமல், துாய்மையாக பராமரிக்கின்றனர்.நகரிய பகுதியினர் காலை, கடற்கரையில் நடைபயிற்சி செல்கின்றனர். மாலை நேரத்தில், பொழுதுபோக்கிற்கு உலவுகின்றனர். அவர்கள் பிரதான சாலையிலிருந்து இறங்கி, கடற்கரை செல்ல, கால்வாய் பாலத்திற்கு வடக்கிலும், தெற்கிலும் நடைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.அணுசக்தி துறையினர் மட்டுமே முன்பு பயன்படுத்தி வந்த கடற்கரையில், தற்போது சுற்றுப்புற பகுதியினரும் கடற்கரையில் உலவ குவிகின்றனர்.அவர்கள் கடலின் அபாய தன்மையை அறியாமல் குளித்து, அலையில் சிக்கி இறக்கின்றனர். இதைத் தவிர்க்க எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்ட நிலையிலும், கடலில் குளித்து இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஜன., 1ம் தேதி, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்த, சென்னை பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்கள், கல்பாக்கம் கடலில் குளித்த போது இறந்தனர்.இதையடுத்து சுற்றுப்புற பகுதியினர் கடற்கரைக்குச் செல்வதை தடுக்க முடிவெடுத்த நிர்வாகம், கடற்கரைக்கு செல்ல தடை விதித்துள்ளது.கடற்கரைக்கான நடைதளம் துவங்கும் பகுதிகளில், தற்போது தடுப்பு அமைத்துள்ளது. சி.ஐ.எஸ்.எப்., படையினரும், பொதுமக்கள் நுழையாமல் இருக்க, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.