உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தசரா விழாவில் ராட்டினங்கள் இயக்க செங்கை பொதுப்பணி துறை அனுமதி

தசரா விழாவில் ராட்டினங்கள் இயக்க செங்கை பொதுப்பணி துறை அனுமதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், நவராத்திரி விழாவையொட்டி, நுாறு ஆண்டுகளுக்கு மேலாக தசரா விழா நடைபெறுகிறது. இவ்விழா, நேற்று முன்தினம் துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.விழா நாட்களில், தினமும் அம்மனுக்கு வெவ்வேறு தோற்றத்தில் மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்வர்.அண்ணா சாலை பகுதியில், தசரா விழாவிற்கு தற்காலிக கடைகள் மற்றும் விளையாட்டு சாதனங்களுக்கு வரி வசூலிக்கும் உரிமத்திற்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 2008ம் ஆண்டு அனுமதி வழங்கியது.அதன்பின், 2024- - 25ம் ஆண்டிற்கான குத்தகை உரிமம், மோன்ராஜ் என்பவருக்கு 21.86 லட்சம் ரூபாய்க்கு அளிக்கப்பட்டது. அதையடுத்து, அண்ணா சாலை மற்றும் அனுமந்தபுத்தேரி பகுதியில், தற்காலிக கடைகள், விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டன. விழா நடைபெறும் பகுதியில் ராட்டினங்கள் அமைத்தற்கு, பொதுப்பணித் துறையிடம் சான்றிதழ் பெறவில்லை எனவும், அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனவும், பா.ஜ., நகர தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர், கலெக்டரிடம் மனு அளித்தனர்.இந்த மனு மீது விசாரணை செய்ய, சப்- - கலெக்டருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, சப்- - கலெக்டர் நாராயணசர்மா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஆய்வுக்கு பின், நகராட்சி சார்பில், பத்து இடங்களில் குடிநீர், பெண்களுக்கு தற்காலிகமாக 20 கழிப்பறைகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தர வேண்டும். ராட்டினங்களுக்கு, பொதுப்பணித் துறை பொறியாளர்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என, குத்தகைதாரருக்கு, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில், பொதுப்பணித் துறை பொறியாளர்கள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.அதன்பின், ராட்டினங்கள் இயங்க நேற்று அனுமதி வழங்கப்பட்டது. நேற்று ராட்டினங்கள் இயங்கியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழா நடைபெறும் பகுதியில், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி