திருப்போரூர் விவசாயிகளிடமிருந்து கொள்முதல்
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய சிறுங்குன்றம் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தற்போது 2,000க்கும் அதிகமான நெல்மூட்டைகள், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.லாரிகள் வர தாமதம் ஆனதால், சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்படவில்லை. மேலும், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த நெல்லையும் இந்த மையத்தில் குவித்து வைத்துள்ளனர். மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து ஈரமாகி விடும் எனவும், போதிய அளவு தார்ப்பாய்கள் வழங்கப்படவில்லை எனவும், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று, தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் திடீரென மழை பெய்தது. உடனே அங்கிருந்த விவசாயிகள், அடுக்கி வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை சுற்றி தார்ப்பாய் விரித்து, முடிந்த அளவிற்கு மூடினர்.ஆனாலும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டையின் மேல் பகுதி, பக்கவாட்டு பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்தன.நனைந்த நெல் மூட்டைகளை உடனடியாக அரைவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், நனையாத நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்கிற்கு ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.