துார்வாரிய மங்கலேரி குளத்தை முழுதாக நிரப்பிய மழைநீர்
பெருங்களத்துார்:தாம்பரம் மாநகராட்சியின் நான்காவது மண்டல அலுவலகம் எதிரே, பெருங்களத்துார் மங்கலேரி குளம் உள்ளது. இக்குளம், 40 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டையாக மாறிப்போனது.மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், 1.40 கோடி ரூபாயில், குட்டையாக இருந்த இடத்தை பெரிய குளமாக மாற்றும் பணிகள், கடந்த மே மாதம் துவங்கின. துார்வாரி, ஆழப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.தொடர்ந்து மழை பெய்து வருவதால், துார்வாரப்பட்ட இக்குளத்தில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றி நடைபாதை, இருக்கை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட எஞ்சிய பணிகள், மழை விட்ட பின் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.