கூவத்துாரில் அங்கன்வாடிக்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
கூவத்துார்: கூவத்துாரில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கூவத்துார் ஊராட்சியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு ஊராட்சிக்கு உட்பட்ட அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மைய கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, அருகே இருந்த பள்ளி கட்டடத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் செயல்படும் பள்ளி கட்டடம் தற்போது பழுதடைந்து உள்ளதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.