அபாய நிலையில் மண் வடிகட்டி புதிதாக அமைக்க கோரிக்கை
கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவாயில் அருகே, ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள மழைநீர் வடிகால் மண் வடிகட்டி உடைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன், புதிய வடிகட்டி பொருத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவாயில் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகாலில் தேங்கும் மண் துகள்களை அகற்ற, ஐந்து அடி இடைவெளியில், 30க்கும் மேற்பட்ட மண் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம், இதில் ஒரு மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் உடைந்து, ஐந்து அடி ஆழத்திற்கு பெரும் பள்ளம் ஏற்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மண் வடிகட்டியால் ஏற்பட்டுள்ள பள்ளம், முன்பை விட தற்போது பெரிதாகி உள்ளது. இந்த பள்ளத்தை ஒட்டியே வாகனங்கள் பயணிப்பதால், கவனக்குறைவாக வாகனங்கள் இதில் சிக்க வாய்ப்புள்ளது. தவிர, இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்தால், உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், சேதமடைந்துள்ள மண் வடிகட்டி இரும்பு சட்டத்தை புதிதாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.