பழங்கால யாத்ரீகர் மண்டபம், கோவில் அரசு பொறுப்பில் பராமரிக்க கோரிக்கை
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பூஞ்சேரியில், புதுச்சேரி சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ள பழங்கால யாத்ரீகர் மண்டபம் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றை, அரசு பாதுகாத்து பராமரிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, பழங்காலத்தில் கடலோர பகுதி வழியாக, பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். பல நாட்கள் யாத்திரை செல்லும் போது, அவர்கள் ஆங்காங்கே தங்கி இளைப்பாறவும், அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கற்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் அழகிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன.மாமல்லபுரம், பூஞ்சேரி, புதுச்சேரி சாலையில், அத்தகைய பழங்கால யாத்ரீகர் மண்டபங்கள் உள்ளன. இதையொட்டி பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் விநாயகர் கோவிலும் உள்ளது.விநாயகர் கோவில், அப்பகுதி பக்தர்கள் பொறுப்பில் வழிபாட்டில் உள்ளது. யாத்ரீகர் மண்டபம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி உள்ளது. இச்சூழலில், மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்காக மண்டப பகுதியில், மேம்பாலம் கட்டப்படுகிறது.பாலத்திற்காக, மண்டபம் மற்றும் கோவில் ஆகியவற்றை அகற்ற, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. சரித்திர கால சான்றாக விளங்கும் அவற்றின் பழமை கருதி, அகற்றாமல் தவிர்ப்பது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அவற்றை தவிர்த்து பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அரசுத் துறை கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில், முறையான பராமரிப்பு இன்றி இவை சீரழிகின்றன. சாலை விரிவாக்கம், மேம்பால கட்டுமானம் முடிந்த பின், இவற்றை அரசுத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.