மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி மந்தம்
03-Oct-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள மழைநீர் கால்வாய்களை முறையாக துார்வார வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் அழகேசன் நகர், ஜே.சி.கே., நகர், நத்தம், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் கலந்து தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பெய்து வரும் கனமழையில், ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, செங்கல்பட்டு முழுதும் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டிள்ளது. இந்நிலையில், மழைநீர் கால்வாய்களை துார்வார சமீபத்தில், நகராட்சி நிர்வாகம் 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால், துார்வாரும் பணிகள் பெயரளவிற்கு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், மழைநீர் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
03-Oct-2025