செங்கை மருத்துவமனையில் குவியும் குப்பை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை துாய்மையாக வைத்திருக்க, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகள் பிரிவில், 3,000க்கும் மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக 1,700 க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் தனியார் துாய்மை பணியாளர்கள், துாய்மை பணி செய்து வருகின்றனர். ஆனால், உள் நோயாளி களாக சிகிச்சை பெற்று வருவோரை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள், மருத்துவமனை வளாகத்திலேயே சாப்பிடுகின்றனர். அப்போது, மீதமுள்ள உணவு பொருட்களை, ஆங்காங்கே குவித்து வைக்கின்றனர். அத்துடன், கண்ட இடங்களில் கை கழுவிட்டு, பாத்திரங்களையும் அங்கேயே கழுவுகின்றனர். இதனால், மருத்துவமனையில் துர்நாற்றம் வீசுவதால், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுமட்டுமின்றி, மருத்துவமனை மாடிகளில் காலி மதுபான பாட்டில்கள், சாப்பிட்ட உணவு பொட்டலங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை துாய்மை பணியாளர்கள் அகற்றினாலும், மீண்டும் அங்கு குப்பை சேர்கிறது. இதனால், மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு, குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.