பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, பரனுார் - பெருங்களத்துார்வரை, தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலை அமைத்தபோது, பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துாரில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.தொடர்ந்து, செங்கல்பட்டு பரனுார் - பெருங்களத்துார்வரை, ஆறு வழிச்சாலையை, எட்டு வழிச்சாலையாக மாற்றி அமைத்தபோது, பயணியர் நிழற்குடைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன், அகற்றப்பட்டன. இப்பணி நிறைவுபெற்றபின், மீண்டும் பயணியர் நிழற்குடைகள் அமைக்கவில்லை. இதனால் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின், தேசிய நெடுஞ்சாலை பகுதியில், பேருந்து நிறுத்தங்களில், பயணியர் நிழற்குடை அமைக்க, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.தற்போது, வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், பேருந்திற்காக காத்திருக்கும், முதியவர், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நிழற்குடை அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.