கோவில் நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க கோரிக்கை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமையான தியாகராஜர் - மருதீஸ்வரர் கோவில் உள்ளது.சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகே இக்கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தற்போது குப்பை மற்றும் கழிவுநீர் நிரம்பி வழிகிறது.இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:இந்த கோவில் நிலத்தில் கடந்த 2009ம் ஆண்டு வரை விவசாயம் செய்யப்பட்டு கோவிலுக்கு நெல் கொடுக்கப்பட்டது. நாளடைவில் விவசாயம் கைவிடப்பட்டது. தற்போது அருகில் உள்ள பெரிய ஊராட்சியான சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகள் ,வணிக கட்டங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுதும் இங்கு விடப்படுகிறது. சுற்றியுள்ள கடைகளில் இருந்து பிளாஸ்டிக் குப்பை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் உள்ளது. மேலும் கழிவு நீர் தேங்குவதால் அருகே உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசடைகின்றது. எனவே இங்கு கழிவுநீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.