செங்கையில் மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியிலுள்ள மழைநீர் கால்வாய்களை, வடகிழக்கு பருவமழைக்கு முன், துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு நகராட்சியில் ஜே.சி.கே.நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இவற்றை முறையாக துார்வாரி சீரமைக்காததால், பருவ மழைக்காலங்களில் ஜே.சி.கே., நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், வடகிழக்கு பருவமழைக்கு முன், நகராட்சி பகுதியிலுள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, நகராட்சி கமிஷனருக்கு, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா ஏற்கனவே உத்தரவிட்டார். ஆனாலும் அப்பணி பெயரளவிற்கே நடந்து உள்ளது. கால்வாய்களை முறையாக துார்வாராததால், மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து, பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் கால்வாய்களை முறையாக துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.