மாம்பாக்கம் - புத்திரன்கோட்டை சாலையில் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் பரிசோதனை
சித்தாமூர்,- சித்தாமூர் அருகே மாம்பாக்கம்- - புத்திரன்கோட்டை இடையே, 2.3 கி.மீ., நீளம் உடைய தார் சாலை உள்ளது. இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது.நெடுஞ்சாலைத் துறை சார்பாக, சாலையை சீரமைக்க, கடந்த ஆண்டு ஜன., 30ம் தேதி, நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 3.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பின், கடந்த ஆண்டு சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வந்த நிலையில், கடந்த ஆக., மாதம் சாலைப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது.இந்நிலையில், சாலை அமைக்கும் பணி செய்ய விடாமல், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, புத்திரன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மல்குமார், மாம்பாக்கம் ஊராட்சி தலைவரின் கணவர் ராமையா ஆகியோர், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.அது தொடர்பாக, சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் பதில் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், சாலைப் பணிகள் தரமற்ற முறையில் நடந்துள்ளதாக, செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு, சென்னை நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனரகத்தில் புகார் அளித்துள்ளார்.அதையடுத்து, நேற்று சென்னை நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இதில், சாலையின் எட்டு இடங்களில் நீளம் மற்றும் அகலம் அளவீடு செய்யப்பட்டது, மேலும், தார் சாலையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலைய இயக்குனரக ஆய்வுக் கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.