ஊரப்பாக்கத்தில் சாலை வசதியின்றி 20 ஆண்டாக பகுதிவாசிகள் தவிப்பு
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கம், சிவசாமி தெருவில், 20 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 692 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 15வது வார்டுக்கு உட்பட்ட சிவசாமி தெரு மற்றும் உட்புற தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர்.இவர்கள் சென்று வர, சிவசாமி தெரு சாலையே, பிரதான சாலையாக உள்ளது. இத்தெருவின் சாலை, கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாகி, வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:சிவசாமி தெரு பிரதான சாலையை சீரமைக்கும்படி, 20 ஆண்டிற்கும் மேலாக கோரிக்கை வைத்தும், ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.குண்டும், குழியுமாக உள்ள இச்சாலையில் பள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தடுமாற்றத்துடன் செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.தவிர, சிறு மழை பெய்தாலும், சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சகதியாக மாறுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, சிவசாமி தெருவில் புதிய சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.