வழிகாட்டி பலகையை அகற்றாமல் சாலை பணி மதுராந்தகம் புறவழிச் சாலையில் அச்சம்
மதுராந்தகம், மதுராந்தகத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, டவுன் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலையில், வழிகாட்டி பெயர் பலகை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளதால், வழிகாட்டி பலகையை அகற்றி விட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுராந்தகம் டவுன் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலையில், மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், பருவ மழை காலங்களில் மழைநீர் விரைந்து வெளியேற முடியாமல், சிரமமாக இருந்து வந்தது. இதையடுத்து, மத்திய அரசு சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மதுராந்தகம் டவுன் பகுதிக்குச் செல்லும் புறவழிச்சாலையில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மீட்டர் நீளத்திற்கு, சாலையின் இடது புறத்தில் மழைநீர் வடிகால்வாய். சதுர வடிவ பாலம் மற்றும் தடுப்பு சுவர், சாலையோரம் இரண்டு புறமும் சிமென்ட் கல் சாலை அமைத்தல் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. ஒரு சில மாதங்களில் பணி முடியும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாலையோரம் சிமெண்ட் கல் அமைக்கும் பணிக்காக, சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு மதுராந்தகம், செய்யூர், சூணாம்பேடு பகுதிகளுக்குச் செல்லும் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த வழிகாட்டி பலகையை அகற்றாமல், சாலையை விரிவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள், இந்த வழிகாட்டி பெயர் பலகையில் மோதி, விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இந்த வழிகாட்டி பெயர் பலகையை அப்புறப்படுத்தி விட்டு, அதன் பின் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.