1,011 புது குளம் உள்ளிட்ட 2,798 பணிகளுக்கு...ரூ.39 கோடி! : செங்கையில் ஊரக வேலை திட்டம் துவக்கம்
செங்கல்பட்டு:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தாண்டில், 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,798 பணிகள் செய்ய, ஊரக வளர்ச்சித்துறை அனுமதி அளித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கானோருக்கு, 100 நாள் வேலை அளிக்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக, 100 நாள் வேலையில், தண்ணீர் சேகரிக்கும் தடுப்பணை கட்டுமானம், கான்கிரீட் சாலை, சிமென்ட் கற்கள், மழைநீர் கால்வாய், பாசன கால்வாய் துார் வாரும் பணி, ரேஷன் கடை, ஊராட்சி கட்டடம், அங்கன்வாடி மையம் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, ஊரக வளர்ச்சித்துறை செய்து வருகிறது.இதைத்தொடர்ந்து, 2024 - 25ம் ஆண்டில், புதிய குளங்கள், விளையாட்டு மைதானம், மேய்க்கால் நிலம் மேம்பாட்டுப் பணிகள், குறுபாலம், பள்ளி சுற்றுச்சுவர், தானிய சேமிப்பு கிடங்கு கட்டுமானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சித்துறை முடிவு செய்தது.மனித உழைப்பு நாட்களை கணக்கிட்டு, திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கும்படி, அந்தந்த வட்டார பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியது.இதையடுத்து மாவட்டத்தில், 1,011 புதிய குளங்கள் அமைத்தல், 361 விளையாட்டு மைதானம், 48 மேய்க்கால் நிலம் மேம்பட்டுப் பணிகள், 193 இடத்தில் சாலையோர மரக்கன்றுகள் நடுதல், 11 இடத்தில் 5 அடி குறுபாலம், மூன்று இடத்தில் 10 அடி குறுபாலங்கள்.மூன்று இடங்களில் பள்ளிச்சுற்றுச்சுவர், எட்டு இடங்களில் ஊராட்சிமன்ற கட்டடம், ஏழு இடத்தில் தானிய சேமிப்பு கிடங்கு, 1,153 இடத்தில் மரக்கன்றுகள் நடுதல் என, 2,798 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, 39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பணிகளை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.இப்பணிகளை தேர்வு செய்து, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின், புதிய குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஊராட்சி அலுவலகம், தானிய சேமிப்பு கிடங்கு கட்டட பணிகள், ஊராட்சி செயலர் பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன.கண்காணிப்புசெங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காக, புதிய குளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மற்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் இப்பணிகள் அனைத்தையும் கண்காணித்து வருகின்றனர்.- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்செங்கல்பட்டு.
மாவட்டத்தில் நடைபெறும் பணிகள்
பணி விவரம் எண்ணிக்கை ரூ. கோடிபுதிய குளம் 1,011 0.96.விளையாட்டு மைதானம் 361 2.91மேய்க்கால் நில மேம்பாடு 48 6.77சாலையோர மரக்கன்றுகள் 193 2.76குறுபாலம் 5 அடி 11 0.58குறுபாலம் 10 அடி 3 0.31பள்ளி சுற்றுச்சுவர் 3 0.23.ஊராட்சி அலுவலகம் 8 2.40.தானிய சேமிப்பு கிடங்கு 7 0.84மரக்கன்றுகள் 1,153 21.28மொத்தம் 2,798 39.09