உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஒரகடம் - செய்யாறு இணைப்பு சாலைக்கு நிலம் எடுக்க... ரூ.362 கோடி ஒதுக்கீடு:அடுத்தக்கட்ட பணிகளை துவக்கியது நெடுஞ்சாலை துறை

ஒரகடம் - செய்யாறு இணைப்பு சாலைக்கு நிலம் எடுக்க... ரூ.362 கோடி ஒதுக்கீடு:அடுத்தக்கட்ட பணிகளை துவக்கியது நெடுஞ்சாலை துறை

காஞ்சிபுரம்: ஒரகடம் - செய்யாறு தொழிற்தட பகுதிகளை இணைக்கும் புதிய சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு, தமிழக அரசு, 362 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவக்கியுள்ளது. சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. புதிது புதிதாக மேலும் பல தொழிற்சாலைகள் துவங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, காஞ்சிபுரத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் சுற்றிலும், புதிய தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிற்பகுதியான ஒரகடத்தில் இருந்து செய்யாறு சிப்காட் பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்வதற்கான விசாலமான சாலை இல்லாதது, நிறுவனத்தினருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் சிரமத்தை ஏற்படுத்துகிறது. செய்யாறில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு, காஞ்சிபுரம் நகரை ஒட்டிய குறுகலான சாலைகளில், பெரிய கன்டெய்னர் லாரிகளை இயக்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. சரக்கு வாகனங்களை சரியான நேரத்திற்கு எடுத்துச் செல்ல முடிவதில்லை. அதனால், காஞ்சிபுரம் அருகே பல சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதற்கான விசாலமான சாலை இல்லாதது, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால், செய்யாறு சிப்காட் பகுதிக்கு செல்ல புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டிய தேவை பல ஆண்டுகளாகவே இருந்தது. இதையடுத்து, ஒரகடம் அருகே புதிதாக நான்குவழிச் சாலை அமைத்து, செய்யாறு தொழிற் தட பகுதியை சென்னையுடன் இணைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இந்த இணைப்பு சாலை, சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் இடையேயான சாலையில், ஒரகடம் அருகே துவங்குகிறது. அங்கிருந்து செய்யாறு சிப்காட் வரை, 43.2 கி.மீ., புதிதாக சாலை அமைகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 கிராமங்கள் வழியாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் என, 33 கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்பட உள்ளது. ஒரகடம் அருகே உள்ள வளையக்கரணை பகுதியில் இருந்து துவங்கும் இந்த சாலை, பழவேரி, சிலாம்பாக்கம் வழியாக மானாம்பதி கிராமத்தில் முடிகிறது. இந்த 33 கிராமங்களிலும் நில எடுப்பு செய்து, 60 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நில எடுப்பு பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர் மேற்கொள்ள துவங்கி உள்ளனர். நில உரிமையாளர்களுக்கு, வருவாய்த்துறையினர் முதற்கட்ட அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி, விசாரணையை துவக்கியுள்ளனர். அதே சமயம், சாலை பணிக்கு பழவேரி, சிறுதாமூர், அருங்குன்றம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமங்கள் வழியே புதிதாக சாலை அமைக்க, 492 ஏக்கர் பட்டா நிலங்களும், 127 ஏக்கர் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலங்களை வழங்கும் விவசாயிகளுக்கு 362 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு, நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் நில எடுப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்துவிடும் என, வருவாய்த்துறை தெரிவிக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செய்யாறு சிப்காட் தொழிற்தட பகுதியை ஒரகடம் அருகே உள்ள நெடுஞ்சாலையுடன் இணைக்க இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு, 362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை, அது சார்ந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட அறிக்கை வந்தவுடன், எத்தனை இடங்களில் சிறுபாலம், உயர்மட்ட பாலம், கால்வாய் போன்றவை அமைக்கப்படும் போன்ற விபரங்கள் தெரிய வரும். இந்த சாலை அமைக்கப்பட்டால், சென்னையிலிருந்து செய்யாறு சிப்காட் பகுதிகளுக்கு சரக்குகளை எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிலையான நில மதிப்பு

இந்த திட்டத்தில் இல்லை

பரந்துார் விமான நிலைய திட்டத்தில் நிலம் வழங்குவோருக்கு, மூன்று வகையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. நில எடுப்பு சட்டப்படியும், நேரடி சமரச பேச்சு மற்றும் நிலையான நில மதிப்பு என்ற மூன்று வகையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதில், நிலையான நில மதிப்பு மூலம் வழங்கப்படும் இழப்பீடு தொகை அதிகமாக இருக்கும். அதுபோல் மூன்று வகையான இழப்பீடு தொகை, செய்யாறு இணைப்பு சாலை திட்டத்தில் இல்லை. நில எடுப்பு சட்டப்படியும், நேரடி சமரச பேச்சு என இரு வகையில் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என, வருவாய்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை