உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பயிர் கடனுதவி வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு

 பயிர் கடனுதவி வழங்க ரூ.560 கோடி ஒதுக்கீடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க, 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 20 கிளைகள், 105 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மூன்று கூட்டுறவு நகர வங்கிகள், 11 நகர கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. மேலும், தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், பணியாளர் கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும், செங்கல்பட்டு மாவட்ட இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ளன. மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. இந்த தாலுகாக்களில் உள்ள, 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் அதிகமாக சாகுபடி செய் யப்படுகிறது. இதற்கு அடுத்து கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெல், கரும்பு, மணிலா சாகுபடி செய்யும் விவசாயிகள், வங்கி கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழைக்குப் பின் நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, அக்., - நவ., மாதங்களில் கடன் உதவி வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு, செ ங்கல்பட்டு மாவட்டத்திற்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 100 கோடி ரூபாயும், திருவள்ளூர் மாவட்டத் திற்கு 320 கோடி ரூபாய் என, மூன்று மாவட்டத்திற்கும் சேர்த்து, 560 கோடி ரூபாயை, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது. சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை, கிராம நிர்வாக அலுவலரிடம், தங்களின் விவசாய நிலங்களின் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை பெற்று, கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, கூட்டுறவுத் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

வட்டி இல்லை

இதுகுறித்து, செங்கல்பட்டு கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில், இந்தாண்டு 140 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடன் வழங்கி வருகிறோம். விவசாயிகள் தவணை காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தினால், வட்டி இல்லை. விவசாயிகள் அனைவரும் பயிர் கடன் பெற, கடன் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

நெற்பயிருக்கு காப்பீடு

வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2025 - 26ம் ஆண்டு, சிறப்பு பருவ பயிர்களை காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு அறிக்கை செய்யப்பட்ட பகுதிகளில், சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிருக்கு, பயிர் காப்பீடு செய்யலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில், இவ்வாண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிருக்கு, வரும் 15ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சிறப்பு பருவத்தில்,'அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா' என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி