உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை பாலாற்று பகுதியில் மணல் திருட்டு...அதிகரிப்பு:கடத்தல் கண்காணிப்பு குழுவினர் அலட்சியம்

செங்கை பாலாற்று பகுதியில் மணல் திருட்டு...அதிகரிப்பு:கடத்தல் கண்காணிப்பு குழுவினர் அலட்சியம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் ஆசியுடன், பாலாற்றில் மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்க, தாலுகா அளவிலான மணல் கடத்தல் கண்காணிப்பு குழு கூட்டங்கள் நடத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்று பகுதிகளில் குடிநீர் கிணறுகள் அமைத்து, பாலாற்று பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் நகராட்சி, தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, பாலாற்றில் கிணறுகள் அமைத்து, கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வினிகம் செய்யப்படுகிறது.இதுமட்டுமின்றி, பாலாற்றில் ஆழ்த்துளைக் கிணறுகள் அமைத்து, விவசாயம் நடைபெற்று வருகிறது. பாலாற்றில் மணல் திருட்டு அதிகமாக நடைபெற்றதால், 2010ம் ஆண்டு, மணல் குவாரிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.இந்த குவாரிகள் தனியார் வாயிலாக நடத்தப்பட்ட போது, பல ஆடி ஆழத்திற்கு தோண்டி, அதிக அளவில் மணல் எடுக்கப்பட்டது.இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின், பாலாற்றில் மணல் எடுக்க, கடந்த 2013ம் ஆண்டு, தமிழக அரசு தடை விதித்தது.இந்த தடைக்குப் பிறகும், மணல் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து, மணல் கடத்தலை கட்டுப்படுத்த, மாவட்ட அளவில், 'மணல் கடத்தல் கண்காணிப்பு குழு' அமைத்து, அரசு உத்தரவிட்டது.இந்த குழுவில் இருந்த வருவாய்த் துறை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர், வனத்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து, பாலாற்றில் மணல் திருட்டை தடுக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.மாதந்தோறும், தாலுகா அலுவலகங்களில், மணல் கடத்தல் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது.இதன் காரணமாக, மணல் திருட்டு குறையத் துவங்கியது. பாலாற்று மணல் கிடைக்காததால் தனியார் தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் கட்டுவோர் 'எம்.சாண்ட்' மணலை பயன்படுத்தி, கட்டுமான பணிகள் மேற்கொண்டு வந்தனர்.தற்போது, மணல் கடத்தலை கண்காணிக்க, மாவட்ட அளவில் மட்டும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது.தாலுகா அளவில் நடைபெறும் மணல் கடத்தல் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுவதில்லை.இதனால், பாலாற்றில் மணல் திருட்டு மீண்டும் துவங்கி, ஜோராக நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது, பாலாற்றில் இருந்து சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில், மணல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டு, மறைவான ஓரிடத்தில் குவித்து வைக்கப்படுகின்றன.மணல் அதிகமாக சேர்ந்ததும், லாரிகள் வாயிலாக, மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன.மணல் திருட்டு நடைபெறுவது குறித்து புகார்கள் வந்தால் மட்டுமே, அதிகாரிகள் சென்று, மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். அவர்களாகவே செல்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மேலும், மணல் கடத்தலில் ஈடுபடுவோர், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு,'மாமூல்' கொடுப்பதாகவும், அதனால், மணல் திருட்டு தொடர்ந்து நடப்பதாகவும், பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.இதனால், மணல் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்த, தாலுகா அளவில் நடைபெறும் மணல் கடத்தல் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க, வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மணல் கடத்தலில் ஈடுபடுவோர், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு,'மாமூல்' கொடுப்பதாகவும், அதனால், மணல் திருட்டு தொடர்ந்து நடப்பதாகவும், பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

மணல் கடத்தல் நடைபெறும் இடங்கள்:@

@செங்கல்பட்டு மாவட்டம் பாலுார், ஆத்துார், மணப்பாக்கம், உதயம்பாக்கம், வல்லிபுரம், ஆனுார், எலுமிச்சம்பட்டு, பிலாப்பூர், மாமண்டூர், நல்லத்துார் பகுதி பாலாற்றில், பைக்குகள் வாயிலாக, கோணிப் பைகளில் மணல் கடத்தல் நடக்கிறது.ஒரு மூட்டை மணல், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எல்.எண்டத்துார், கே.கே.பூதுார் ஆகிய பகுதிகளில், சவுடு மண் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை