கூடுவாஞ்சேரி அருள் நகரில் மின் கம்பங்கள் கடும் சேதம்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி முதலாவது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர், பிருந்தாவனம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் பழுதடைந்து, லேசாக காற்று அடித்தாலும் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளன.முதலாவது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில், மின் கம்பங்கள் மிகவும் சேதமாகி உள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை.இதனால், இரவு நேரங்களில் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.இதுகுறித்து, கூடுவாஞ்சேரி மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே இந்த பகுதியில் தெரு விளக்குகள் சீராக எரியவும், சேதமான மின் கம்பங்களை மாற்றி அமைக்கவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.