சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீர்
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி அண்ணா சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை நகர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 6 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 15 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், மறைமலை நகர் என்.ஹெச் 2 அண்ணா சாலை ஓரம் உள்ள பாதாள சாக்கடை மூடி மேல்தளத்தில் இருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.